அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகமிக முக்கியமானது. இதனால் ஐ.நா. அணுஆயுதத்தடை ஒப்பந்த மாநாட்டில் பார்வையாளராகக் கலந்து கொள்ள மாட்டோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டால் அது ஜப்பானின் அணுசக்தி தடுப்பு கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கு தவறான தகவலை அனுப்புவதாகிவிடும் எனத் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதத்தடை ஒப்பந்த மாநாடு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இன்று தொடங்கியது.
இது தொடர்பாக ஜப்பான் அமைச்சரவையின் செயலாளர் கூறுகையில்
ஜப்பானின் தேசிய பாதுகாப்புத்தான் இந்த முடிவு எடுக்க முக்கிய காரணம்.கடுமையான பாதுகாப்புச் சூழலின் கீழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கவும், ஜப்பானின் இறையாண்மை மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும் அணுசக்தி தடுப்பு இன்றியமையாதது” எனவும் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதேபோன்று மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ஐ.நா. இந்த நடவடிக்கையை கொண்டு வந்தது.
அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மட்டும் இன்னும் ஐ.நா.வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை எனக் கூறி ஜப்பான் கையெழுத்திட மறுத்துவிட்டது.