இலங்கையின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றுகையில் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்று, திரும்ப வராமல் பிணை ஒப்பந்தங்களை மீறிய விரிவுரையாளர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 3,000 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு இத்தகவலை வெளிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நிஷாந்த சமரவீர தலைமையிலான இந்தக் குழுவின் கூட்டத்தில் இத்தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இவ்வாறு ஒப்பந்தங்களை மீறி வெளிநாடுகளில் தங்கியுள்ள விரிவுரையாளர்களிடமிருந்து நிலுவைத் தொகையை விரைவாக
வசூலிப்பதற்குத் தேவையான முறையான பொறிமுறை ஒன்றை உடனடியாக உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, இக்குழு உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கூட்டமானது கடந்த 4ஆம் திகதி இடம்பெற்றது. மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023 ஆம் மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான தற்போதைய தொழிற்பாடுகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, இக்கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. அக் கூட்டத்திலேயே இந்த விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. இதன்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மற்றும் நிர்வாகக் சீர்கேடுகள் தொடர்பில், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு தனது தீவிர கவலையை வெளியிட்டது.
அரசாங்கத்திடமிருந்து ஆண்டுதோறும் சுமார் 300 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுக்கொள்ளும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தணிக்கை மற்றும் நிர்வாகக் குழுவில் திறைசேரியின் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படாமை சுட்டிக்காட்டப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழகத்தில், பணியாளர்களின் தனிப்பட்ட கோப்புகள் காணாமல் போயுள்ளமை, கல்வித் தகைமைகள் மற்றும் பதவி உயர்வுகள்
தொடர்பான சான்றிதழ்களில் காணப்படும் முரண்பாடுகள் முதலான பல நிர்வாகச் சீர்கேடுகள் தொடர்பிலும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
