கனடா பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசாங்கம், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் அமெரிக்காவுடனான வர்த்தகச் சார்பைக் குறைக்கவும் 2026ஆம் ஆண்டுக்கான புதிய மத்திய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
நவம்பர் 5ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு Masters of Our Destiny எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதன்படி, பல ஆண்டுகளுக்கான முதலீடுகள் மற்றும் வரிச் சலுகைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக மொத்தம் 142.1 பில்லியன் கனேடிய டொலர்கள் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
2026–2027 நிதியாண்டில் அரசாங்கத்தின் மொத்தச் செலவு 603 பில்லியன் டொலர்களாகவும், வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 62.3 பில்லியன் டொலர்களாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கனேடிய நிறுவனங்களின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வரிச் சலுகைகள், எரிசக்தி உற்பத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கலாசாரத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
கனடாவின் முதல் தேசிய இறையாண்மைச் செல்வ நிதியத்தை உருவாக்குவதற்காக 25 பில்லியன் டொலர் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பாதுகாப்புத் தொழில்துறையை வலுப்படுத்த 7.7 பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக வரிகள் மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுடனான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் கனடா திட்டமிட்டுள்ளது.
2035ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவுக்கு வெளியே உள்ள சந்தைகளுக்கான ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவது அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும்.
இந்த வரவு செலவுத் திட்டம் கனடாவின் எதிர்காலப் பொருளாதாரத்தை எந்த அளவுக்கு மாற்றும் என்பது தற்போது கவனத்தைப் பெற்றுள்ளது
