நியூயோர்க்கிற்கு மின்சாரத்தை கடத்தும் புதிய மின் கடத்தி பாதையின் ஒரு பகுதிப் பங்குகளை, கானவாக்கே (Kahnawake) பழங்குடியின மோஹாக் சமூகத்திற்கு விற்பனை செய்வதற்கு, ஹைட்ரோ-கியூபெக் (Hydro-Québec)
நிறுவனம் முன்மொழிந்துள்ளது.
கியூபெக்கில் அமைந்துள்ள இந்த 58 கிலோமீற்றர் நீளமுடைய மின் கடத்திப் பாதையின் பங்குகளைப் பெறுவதன் மூலம், மொன்றியலுக்கு தெற்கே உள்ள இந்த முதன்மை பழங்குடியின சமூகம் குறித்த திட்டத்தின் பங்குதாரராக மாறவுள்ளது.
ஹைட்ரோ-கியூபெக் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, இந்த மின் கடத்திப் பாதையின் குறிப்பிட்ட பகுதி, சுமார் 310 மில்லியன் டொலர் பெறுமதியுடையதாகும்.இந்த திட்டத்தின் மொத்தப் பெறுமதியில் பாதியளவு பங்குகளை
வாங்குவதற்கு கானவாக்கே பழங்குடியின பேரவை திட்டமிட்டுள்ளதாக அவர்களின் சட்டத்தரணி எரிக் டூசெட் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ-கியூபெக் மற்றும் கானவாக்கே பழங்குடியின பேரவை ஆகிய இரண்டும் இணைந்து உருவாக்கும் புதிய கூட்டு நிறுவனத்திற்கு, இந்த மின் கடத்திப் பாதையின் உரிமையை மாற்றுவதற்கான ஒப்புதலை வழங்குமாறு, கியூபெக் மாகாண சக்தி ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் முழுமையாக அமுலுக்கு வரும் பட்சத்தில், கானவாக்கே சமூகம் தனது பங்கிற்கான தொகையை ஹைட்ரோ-கியூபெக் நிறுவனத்திற்கு செலுத்தும்.
அதற்குப் பதிலாக, அந்த மின் கடத்தி பாதை மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை குறித்த பழங்குடியின சமூகம் தொடர்ந்து பெற்றுக்கொள்ள முடியும். கியூபெக் மாகாணத்தில் உள்ள நீர்மின் நிலையங்களில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
பழங்குடியின மக்களின் பொருளாதார மறுமலர்ச்சிக்கும், வணிக ரீதியான பங்களிப்பிற்கும் இது ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகின்றது.
