மட்டக்களப்பில் வைத்தியர்களின் உரிமையை பாதுகாப்போம், பொருளாதார அநீதி, வைத்தியர்களின் பற்றாக்குறை, கொடுப்பனவுகள் வெட்டப்படுவதற்கு மற்றும் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மட்டு போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை (6) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் விசேட வைத்திய நிபுணர் மதனழகன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னாள் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் நூற்றுக்கு மேற்பட்ட வைத்தியர்கள் ஒன்று திரண்டனர்.
இதையடுத்து விடுமுறை நாள் கொடுப்பனவில் குறைக்கப்பட்ட 3ஃ1 பகுதியை உடனே வழங்கு மருத்துவ சேவையை பாதுகாப்போம், வைத்தியர்களை விட்டுவிட்டு விரட்டாதே, இலவச மருத்துவத்தை தனியார் மருத்துவத்தை நோக்கி நகராதே, பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்து,
ஒழுங்கமைக்கப்பட்ட சட்ட மூலத்தை நிறுத்து, போன்ற பல சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவு பகுதி நுழைவாசலில் இருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக வைத்தியசாலை நிர்வாகப் பிரிவு நுழைவாயில் பகுதி வரை சென்று சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.
