கியூபெக் மாகாணத்தில் Halloween கொண்டாட்டத்தின்போது சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட மிட்டாய்களில் ஊசி மற்றும் உலோகப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாகப் பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து Sûreté du Québec எனப்படும் கியூபெக் மாகாணப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிடைத்துள்ள தகவல்களின்படி, கடந்த சனிக்கிழமை Halloween கொண்டாட்டத்தின்போது சிறுவர்கள் வீடு வீடாகச் சென்று மிட்டாய்களைச் சேகரித்துள்ளனர்.
இதன்போது இரண்டு குடும்பங்கள் தங்களுக்குக் கிடைத்த மிட்டாய்களில் ஆபத்தான உலோகப் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளன.
முதலாவது சம்பவம் Drummondville பகுதியில் இடம்பெற்றுள்ளது. அங்கு சிறிய அளவிலான சாக்லேட் ஒன்றுக்குள் ஊசி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது சம்பவம் Chaudière-Appalaches பிராந்தியத்திலுள்ள Saint-Marcel பகுதியில் பதிவாகியுள்ளது. அங்கு சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட சாக்லேட் ஒன்றுக்குள் உலோகத்தினால் செய்யப்பட்ட சிறிய குத்தூசி போன்ற பொருள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் கியூபெக் மாகாணப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், Halloween கொண்டாட்டத்திற்குப் பின்னர் சிறுவர்கள் சேகரித்த அனைத்து மிட்டாய்களையும் பெற்றோர்கள் கவனமாகப் பரிசோதிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, பொதியிடல் சேதமடைந்துள்ள மிட்டாய்கள், திறக்கப்பட்ட பொதிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் காணப்படும் உணவுகளைச் சிறுவர்களுக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மிட்டாய்களுக்குள் ஊசி அல்லது வேறு ஏதேனும் ஆபத்தான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றைத் தொடாமல் பாதுகாப்பாக வைத்திருந்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
