யாழ்ப்பாணம் வலி வடக்கின் காங்கேசன்துறை பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பொன்னாலை – பருத்தித்துறை பிரதான வீதியில் அமைக்கப்படவுள்ள குறித்த மதுபானசாலைக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் உரிமையாளர் திறப்புக்கான ஆரம்பகட்டப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
மீள்குடியேற்றம் முழுமையடையாத பகுதி, அருகிலுள்ள ஆலயங்கள் மற்றும் முன்னர் இயங்கிய பாடசாலை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, அப்பகுதியில் மதுபானசாலை அமைக்கக்கூடாது எனப் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மாதம் 8ஆம் திகதி தெல்லிப்பழையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டதுடன், மதுபானசாலைக்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு கோரி பிரதேச செயலரிடமும் மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மதுபானசாலை அமைக்கப்படவுள்ள இடத்திலேயே இன்று மீண்டும் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
