வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களின் அனுமதிச் சிக்கல்களைக் குறைக்க முத்தரப்பு ஒப்பந்தம் வியாழக்கிழமை (29.10.2026) வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
முதலீட்டாளர்கள் பல்வேறு திணைக்களங்களிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைத்து, முதலீட்டுச் செயற்பாடுகளை எளிதாக்கும் நோக்கில் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட இணையத்தளத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக முன்னெடுப்பதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் அற்புதராஜா மற்றும் இலங்கை முகாமைத்துவக் கழகத்தின் திட்டத் தலைவர் கௌசல் ராஜபக்ச ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.
முதலீட்டாளர்கள் பல்வேறு திணைக்களங்களுடனும் நிறுவனங்களுடனும் தனித்தனியாகத் தொடர்புகொண்டு அனுமதிகளைப் பெறும்போது எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைக் குறைப்பது இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இதன் மூலம் முதலீட்டுச் செயற்பாடுகளுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்வதையும், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் தொடர்புகளை ஒருங்கிணைப்பதையும் இலகுவாக்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

