எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷீல்ட் செயற்கைக்கோள் வலையமைப்பைப் பயன்படுத்துவதில் உக்ரைனுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உயிரிழப்புகளுக்கு வழிவகுப்பதாகக் கனேடியப் பிரதமர் மார்க் கார்னி கடுமையாக விமர்சித்துள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்த அவர், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தனது மக்களின் உயிர்களைப் பாதுகாக்கப் போராடும் உக்ரைனுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது கவலைக்குரியது எனக் குறிப்பிட்டார்.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்பின் இராணுவப் பயன்பாட்டுக்கான பதிப்பே ஸ்டார்ஷீல்ட் ஆகும்.
உக்ரைன் இராணுவம் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கண்காணிப்பதற்கும், ஆளில்லா விமானங்களின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவதற்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது.
இந்த வலையமைப்புக்கான அணுகலில் ஏற்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, வேகமாகப் பயணிக்கும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கண்காணிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான உக்ரைனின் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கட்டுப்பாடுகளுக்கான பொறுப்பு யாரிடம் உள்ளது என்பது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. ஸ்டார்ஷீல்ட் அமெரிக்க அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்றும், அதன் பயன்பாடு தொடர்பான கட்டுப்பாடுகள் அமெரிக்க இராணுவத்தினாலும் இறுதியில் அமெரிக்க ஜனாதிபதியினாலும் தீர்மானிக்கப்படுகின்றன என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தக் கட்டுப்பாடுகளைத் தான் உத்தரவிடவில்லை எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், உக்ரைனுக்கான செயற்கைக்கோள் அணுகல் மீண்டும் வழங்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தாலும், கட்டுப்பாடுகள் தொடர்வதாக உக்ரைன் இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த மார்க் கார்னி, செயற்கைக்கோள் தொழில்நுட்ப அணுகலில் ஏற்பட்ட மாற்றங்கள் உண்மையான மனித உயிரிழப்புகளுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்டார். கீவ் நகரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

