அமெரிக்க இடைத்தேர்தலில் கனடா தலையிட முயல்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை எனப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி, இக்குற்றச்சாட்டுகளில் எந்தவொரு அடிப்படையும் இல்லை என்றும், இதனைத் தாம் நேரடியாகவே நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்கு முன்னதாக, கனடாவின் சாத்தியமான தலையீடுகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
குறிப்பாக, கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா (Pete Hoekstra) வெளியிட்ட கருத்துக்கள் குறித்துப் பிரதமர் கார்னி தனது ஏமாற்றத்தைப் பதிவு செய்தார்.
ஒட்டாவா நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கனடிய அதிகாரிகள் அமெரிக்கத் தேர்தலின் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்த முயல்வதாகவும், அமெரிக்க ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகளைக் கனடிய அதிகாரிகள் சந்தித்தமை உள்ளிட்ட சம்பவங்களைச் சாத்தியமான தலையீடுகள் என்றும் சுட்டிக்காட்டியிருந்தது.
இருப்பினும், இத்தகைய சந்திப்புகள் இயல்பான இராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியே தவிர வேறொன்றுமில்லை எனப் பிரதமர் கார்னி விளக்கமளித்தார்.
அமெரிக்காவில் கனடா வலுவான இராஜதந்திர பிரசன்னத்தைக் கொண்டுள்ளதாகவும், மற்றொரு நாட்டின் ஜனநாயக நடைமுறைகளில் தலையிடாமல் இருப்பதில் கனடா மிகவும் கவனமாகச் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அமெரிக்க இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் இணைந்து நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு, அமெரிக்காவிலுள்ள கனேடிய தூதரக அதிகாரிகளுக்குக் கனடிய வெளியுறவு அமைச்சு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாகவும் பிரதமர் கார்னி உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, கனடாவுடனான வர்த்தகப் போர் காரணமாக, கனடாவுடனான அமெரிக்காவின் எல்லைகளில் அமைந்துள்ள பிராந்திய மாநிலங்களில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் கடும் அழுத்தங்களைச் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக மிச்சிகன் மாநிலத்தில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ரோஜர்ஸ் (Mike Rogers), இந்த வரிப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனத் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

