ஹரிஸ்பத்துவ பகுதியில் அமைந்துள்ள பூஜபிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, பல பகுதிகளில் 42 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் நீர் விநியோகத் தடை, 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மெடவலவின் பழைய மற்றும் புதிய சேவைக் குளங்களின் கீழ் வரும் பகுதிகள், கல்லனவத்த, கலகெதர, மாவத்தகம உள்ளிட்ட பகுதிகளும் அவற்றைச் சூழவுள்ள பிரதேசங்களும் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், நீர் விநியோகத் தடை ஆரம்பமாவதற்கு முன்னர் தங்களுக்குத் தேவையான நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், தடை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் சேமிக்கப்பட்ட நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் நுகர்வோருக்கு ஏற்படும் சிரமங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

