யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள கிணறொன்றிலிருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரியாலை பகுதியில் அமைந்துள்ள காணியொன்றில் இருந்த கிணற்றைச் சுத்தம் செய்து, நீரை இறைத்தபோது, கிணற்றுக்குள் இருந்து உரப்பை மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த மூட்டைகளை மேலே எடுத்து சோதனையிட்டபோது, அவற்றுக்குள் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த துப்பாக்கி ரவைகளை மீட்பதற்காக நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

