ஸ்கார்பரோ பகுதியில், வீட்டின் கூரையைப் புதுப்பிப்பதற்காக ஒப்பந்தம் செய்துகொண்ட 76 வயது முதியவர் ஒருவர், தற்போது கூரையின்றிப் பாழடைந்த நிலையில் உள்ள தனது வீட்டில் வாழ முடியாமல் தவித்து வருகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை, முதியவரின் வீட்டுக் காப்பீட்டு நிறுவனம், அவர் கோரிய இழப்பீட்டுத் தொகையின் பெரும்பகுதியை நிராகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாத இறுதியில், சூப்பர் டிரை ரூஃபிங் அண்ட் மேசனரி என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், லாரன்ஸ் ஹுவாங் என்பவரின் வீட்டிற்குச் சென்று, கூரையில் கொறித்துண்ணிகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை முழுமையாக மாற்ற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, 76 வயதான லாரன்ஸ் ஹுவாங், சுமார் 50 ஆயிரம் டொலர் பெறுமதியான கூரைப் புதுப்பிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதற்காக, நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவரிடம் 25 ஆயிரம் டொலரை முன்பணமாக வழங்கியுள்ளார்.
எனினும், ஒப்பந்தக்காரர்கள் வீட்டின் கூரையை முழுமையாக அகற்றிய பின்னர், வீட்டின் உட்பகுதி மழையிலும் வெயிலிலும் பாதிக்கப்படும் வகையில் திறந்த நிலையில் விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பணிகளுக்கான செலவும் அதிகரித்துள்ளது. முதியவர் மேலும் 1,800 டொலர்களை வழங்கியதாகவும், பின்னர் 64 ஆயிரம் டொலர்களுக்கான காசோலையை வழங்க முயன்றபோது, வங்கிப் பணியாளர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டதால் அந்தக் காசோலை ஏற்கப்படவில்லை என்றும் அவரது மருமகள் கேட்டி செம்பிள் தெரிவித்துள்ளார்.
வங்கிப் பணியாளர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், முதியவரின் மருமகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், சில நாட்களுக்குப் பின்னர் ஒப்பந்தக்காரர்கள் திடீரென அந்த இடத்தைவிட்டுச் சென்றுள்ளனர். இதனால், வீட்டின் கூரை அகற்றப்பட்ட நிலையிலேயே விடப்பட்டதுடன், வீட்டின் முன்பாகவும் மரக்கட்டைகள் குவிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அதன் தொலைபேசி எண் செயல்படவில்லை என்றும், மின்னஞ்சல் முகவரியும் செயல்படாத நிலையில் இருப்பதாகவும் கேட்டி செம்பிள் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தச் சம்பவம் தொடர்பாக கனடாவின் சி.பி.சி. ஊடகமும் நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும், வழங்கப்பட்ட தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் விபரங்கள் ஊடாக நிறுவனத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

