கனடாவின் மொன்றியல் நகரில், நகராட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் சுமார் 3,100 தொழில்முறை ஊழியர்கள் இன்று, ஒக்டோபர் 19ஆம் திகதி முதல் வேலைநிறுத்த நடவடிக்கையை ஆரம்பிக்கின்றனர்.
சம்பள உயர்வு, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதியத்தைப் பாதுகாத்தல் மற்றும் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட விடயங்களில் நிலவும் கருத்து வேறுபாடுகளே இந்த வேலைநிறுத்தத்திற்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
மொன்றியல் நகராட்சி தொழில்முறை ஊழியர்களின் தொழிற்சங்கத்திற்கும் நகர நிர்வாகத்திற்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம், 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று முதல் ஆரம்பமாகும் இந்த வேலைநிறுத்தம், வார நாட்களில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. வார இறுதி நாட்களில் முழுமையாக வேலைநிறுத்தம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தில் நூலகப் பணியாளர்கள் மட்டுமன்றி, தகவல் தொழில்நுட்பம், நீர் முகாமைத்துவம், கலாசாரம், சுற்றுச்சூழல் மற்றும் நிதிப் பிரிவுகளில் பணியாற்றும் தொழில்முறை ஊழியர்களும் பங்கேற்கின்றனர்.
இதனால், மொன்றியல் நகரின் சில நூலகங்கள், கலாசார நடவடிக்கைகள் மற்றும் வழக்கமான நேரத்திற்கு அப்பால் இயங்கும் நகராட்சி சேவைகளில் தாமதங்கள் அல்லது இடையூறுகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு அத்தியாவசியமான சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 23ஆம் திகதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தொழிற்சங்க உறுப்பினர்களில் 90.61 சதவீதத்தினர் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இந்த வேலைநிறுத்தம் எவ்வளவு காலம் தொடரும் என்பது குறித்தும், நகர நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எப்போது தீர்வை எட்டும் என்பது குறித்தும் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

