மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற ASKO கராத்தே கழகம், சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் 114 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இலங்கையின் வென்னப்புவ உள்ளக விளையாட்டரங்கில், சனிக்கிழமை 17ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இந்தச் சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி நடைபெற்றது.
இலங்கை உட்பட ஐந்து நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், மன்னார் ASKO கராத்தே கழகத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர் மத்தியாஸ் அன்ரனி இன்பராஜின் வழிகாட்டலில் சுமார் 50 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதன்போது, 114 பதக்கங்களை வென்ற ASKO கராத்தே கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்று, அதற்கான நினைவுக் கிண்ணத்தையும் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் உப்புக்குளம், பள்ளிமுனை, மன்னார் நகரம், பட்டித்தோட்டம், கீரி, அடம்பன், பனங்கட்டுக்கொட்டு மற்றும் ஜோசப்வாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.
மன்னார் மாவட்ட கராத்தே வரலாற்றில், சர்வதேசப் போட்டியொன்றில் ASKO கராத்தே கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றிருப்பது இதுவே முதல் தடவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட மாணவர்களின் இந்தச் சாதனை, அப்பகுதி விளையாட்டுத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

