மொன்ரியல் நகரின் செயிண்ட்-லாரன்ட் நகராட்சி, பொது இடங்களில் மின்சார ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட மோட்டார் பொருத்தப்பட்ட தனிநபர் போக்குவரத்து சாதனங்களைத் தடைசெய்யும் புதிய துணைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, நகராட்சியின் அதிகார வரம்பிற்குட்பட்ட பூங்காக்கள் மற்றும் நடைபாதைகள் உள்ளிட்ட பொது இடங்களில் இத்தகைய சாதனங்களைப் பயன்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், கடந்த கோடைக்காலத்தில் இடம்பெற்ற தொடர் சம்பவங்கள் மற்றும் விபத்துகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி மன்ற உறுப்பினர் வானா நசாரியன் தெரிவித்துள்ளார்.
இதன்படி மின்சார ஸ்கூட்டர்களை அனைத்து இடங்களிலும் முழுமையாகத் தடை செய்வது தங்களது நோக்கமல்ல என்றும், அவற்றின் வேகத்தினால் பாதிக்கப்படக்கூடிய பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுப்பதே முக்கிய நோக்கம் என்றும் விளக்கியுள்ளார்.
குறிப்பாக, சிறுவர்களைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் முதியவர்கள் பூங்காக்களையும் நடைபாதைகளையும் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்தப் புதிய துணைச் சட்டம், மின்சார ஸ்கூட்டர்கள், மின்சார ஒருசக்கர வாகனங்கள் மற்றும் ஏனைய மோட்டார் பொருத்தப்பட்ட தனிநபர் போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்துவோர் பொறுப்புடன் நடந்துகொள்ள உதவும் எனவும் நகராட்சி எதிர்பார்க்கிறது.
எனவே, செயிண்ட்-லாரன்ட் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதிக்குச் செல்லும் மின்சார ஸ்கூட்டர் பயனர்கள், பொது இடங்களில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிந்துகொண்டு, நகராட்சியின் விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும் என கூறப்பட்டுள்ளது.
