மொன்றியல் நகரில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகப் புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மொன்றியல் நகர நிர்வாகம், Société de transport de Montréal (STM) மற்றும் மொன்றியல் காவல்துறை இணைந்து, Metro வலையமைப்பில் காவல்துறையினரின் கண்காணிப்பை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.
இதற்காக 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் 52 கூடுதல் சிறப்புக் காவல் அதிகாரிகளைப் பணியமர்த்துவதற்கு நகர நிர்வாகம் ஆண்டுதோறும் 6.4 மில்லியன் கனேடிய டொலர்களை முதலீடு செய்யவுள்ளது. அதுவரை, இந்த இலையுதிர்காலத்தில் 12 கூடுதல் காவல்துறை அதிகாரிகளை Metro வலையமைப்பில் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்புக் கண்காணிப்பு கமராக்களை மேம்படுத்துதல், காவல்துறை ரோந்துப் பணிகளை அதிகரித்தல் மற்றும் உதவி தேவைப்படும் மக்களுக்கு சமூகப் பணியாளர்கள் மூலம் ஆதரவு வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நடவடிக்கைகள் மூலம் Metro பயணிகளின் பாதுகாப்பு உணர்வை மேம்படுத்தவும், குளிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் நகர நிர்வாகம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
