கியூபெக் மாகாணத்தில் “திறமையான தொழிலாளர் தெரிவுத் திட்டத்தின்” (Skilled Worker Selection Program) கீழ், விண்ணப்பித்த 750 பேருக்கு, பிழையான கோப்பு மூடல் (File closure) அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
அந்த அறிவிப்புகள் தவறுதலாகவே அனுப்பப்பட்டுள்ளதாக, கியூபெக் மாகாணத்தின் குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது.
கணினிப் பிழை (Computer error) ஒன்றின் காரணமாகவே இந்தத் தவறு நேர்ந்துள்ளதாகக் கியூபெக் குடிவரவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் நிரந்தரமாகக் குடியேற விரும்பும் வெளிநாட்டினருக்காக இந்தத் ”திறமையான தொழிலாளர் தெரிவுத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தங்களது விண்ணப்பங்கள் மூடப்பட்டதாக வந்த திடீர் அறிவிப்புகளால் விண்ணப்பதாரர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியும் கவலையும் ஏற்பட்டுள்ளதாகக் குடிவரவு வழக்கறிஞர் மாக்சிம் லபாயின்ட் (Maxime Lapointe) தெரிவித்துள்ளார்.
உரிய தரப்பினர் இந்தத் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
