முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள காட்டுயானைகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் காட்டுயானைகளின் இத்தகைய அத்துமீறல்களுக்கு வன சீவராசிகள் திணைக்களம் ஊடாக உடனடித் தீர்வை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் (07) இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவின் கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு, கேப்பாப்பிலவு – புலக்குடியிருப்பு பகுதி, புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் தற்போது யானைகளால் வீடுகள், விளைநிலங்கள், விவசாய உற்பத்திப் பொருள்கள், தென்னைகள் என மக்களின் வாழ்விடமும் வாழ்வாதார மூலமும் அழிக்கப்படுகின்றன.
இவ்வாறு தொடரும் அழிவுகளுக்கு உடன் தீர்வு வழங்க வேண்டும். அடுத்த ஆண்டின் ஒதுக்கீட்டில் யானை வேலி இடப்படும் வரை மக்களின் வாழ்வுக்கும் வாழ்வாதாரத்துக்கும் யார் பொறுப்பாவது? ஆண்டுக்கணக்கில் வளர்த்தெடுத்த வான்பயிர்கள் ஓர் இரவில் சாய்க்கப்படுகின்றன.
இவ்வாறான அத்துமீறிய யானை – மனித மோதலுக்கு பிரதேச மட்டத்தில் வன சீவராசிகள் திணைக்களம் ஊடாக உடனடியாக தற்காலிக தீர்வையேனும் வழங்க இவ்வரசு வகை செய்தல் வேண்டும் என்றார்.

