கியூபெக் மாகாணத்தில் செயல்பட்டு வரும் தரவு மையங்களுக்கான (Data Centres) மின்சாரக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்துவதற்கான யோசனையை, கியூபெக் அரசுக்குச் சொந்தமான ‘ஹைட்ரோ-கியூபெக்’ (Hydro-Québec) மின்சார நிறுவனம் முன்மொழிந்துள்ளது.
இதர நுகர்வோர் மீது கூடுதல் நிதியச்சுறுத்தல் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு, கூகுள் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யத் தயாராகி வருகின்றன.
மொண்ட்ரியல் நகரில் மாகாண மின்சார ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (Régie de l’énergie) முன்னிலையில் நடைபெற்ற பகிரங்க விசாரணையின் போதே ஹைட்ரோ-கியூபெக் நிறுவனம் இந்த கோரிக்கையை முன்வைத்தது.
கியூபெக் மாகாணத்தில் உபரி மின்சாரம் இருந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஹைட்ரோ-கியூபெக் நிறுவனத்தின் செலவு மற்றும் விலைக் கட்டுப்பாட்டுப் பிரிவுத் தலைவர் சாரா டிரபெல்சி (Sarah Trabelsi), தெரிவித்தார்.
கியூபெக் மாகாணத்தில் அதிகரித்து வரும் தரவு மையங்களின் மின்சாரத் தேவையால் சாதாரண நுகர்வோரின் கட்டணம் உயர்வதைக் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய முன்மொழிவின்படி, 5 மெகாவாட் திறனுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் தரவு மையங்களுக்குக் கட்டண உயர்வை அமுல்படுத்தக் கோரப்பட்டுள்ளது.
தற்போது ஒரு கிலோவாட் மணிநேரத்திற்கு சராசரியாக 6.82 சென்ட்களைக் கட்டணமாகச் செலுத்தும் தரவு மையங்களுக்கு, புதிய கட்டண உயர்வுக் கொள்கை மூலம், சராசரியாக 13 சென்ட்கள் வரை விலை உயர்த்தப்படவுள்ளது.
தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் சராசரி அடக்கவிலை கிலோவாட் மணிநேரத்திற்கு 12 சென்ட்களாக உள்ள நிலையில், தரவு மையங்களுக்கு சலுகை விலையில் தொடர்ந்து மின்சாரம் வழங்குவது மின்சார விநியோகக் கட்டமைப்பிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும், அதன் சுமையை ஏனைய வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முடியாது என்றும் ஹைட்ரோ-கியூபெக் மின்சார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

