மொன்றியலின் முக்கிய போக்குவரத்து பாதைகளில் ஒன்றான Jacques-Cartier பாலத்தில் இன்று காலை நான்கு வாகனங்கள் தொடர்புபட்ட விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
காலை சுமார் 9.30 மணியளவில் இந்த விபத்து தொடர்பாக Sûreté du Québec எனப்படும் கியூபெக் மாகாண பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கிடைத்த ஆரம்பத் தகவல்களின்படி, வடக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஒரு வாகனம் தனது பாதையில் இருந்து விலகி, எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருந்த மேலும் மூன்று வாகனங்களுடன் மோதியுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் வாகனங்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதால், பாலத்தின் இரு திசைகளிலும் தலா ஒரு பாதை மட்டுமே திறக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக Jacques-Cartier பாலத்தை பயன்படுத்தும் சாரதிகள் மத்தியில் குறிப்பிடத்தக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்தில் தொடர்புபட்டவர்களின் உடல்நிலை தொடர்பான முழுமையான தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
