“கனடாவின் குடியேற்றக் கொள்கையில் மீண்டும் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து பிரதமர் Mark Carney கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்திய New York Times நேர்காணலில் பேசிய அவர், கனடாவின் குடியேற்ற அமைப்பு தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக மக்கள் தொகை வளர்ச்சியை எப்போது கட்டுப்படுத்தப்பட்ட முறையில் மீண்டும் அதிகரிப்பது என்பது குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் சர்வதேச மாணவர்கள் மற்றும் temporary workers உள்ளிட்ட non-permanent residents எண்ணிக்கை வேகமாக அதிகரித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு குடியேற்ற எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கனடாவின் மக்கள் தொகை வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க அளவில் மந்தமடைந்துள்ளது.
இந்த நிலையில், குடியேற்றத்தை உடனடியாக அதிகரிப்பதாக பிரதமர் அறிவிக்கவில்லை. மாறாக, பொருளாதாரம், தொழிலாளர் தேவை, வீடமைப்பு மற்றும் பொது சேவைகளின் திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அதிகரிப்பது குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய குடியேற்றத் திட்டம் இந்த இலையுதிர் காலத்தில் வெளியாக உள்ள நிலையில், கனடாவின் எதிர்கால குடியேற்ற இலக்குகள் குறித்த தெளிவான தகவல்கள் அதில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
