கியூபெக் மாகாணப் பொதுத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு (Advance Polling) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், வாழ்க்கைச் செலவின உயர்வு, மொழியுரிமை மற்றும் சுகாதாரத் துறை சீர்திருத்தங்கள் ஆகியவை, இத்தேர்தல் காலத்தில் விவாதிக்கப்படும் முதன்மைப் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன.
முன்கூட்டிய வாக்குப்பதிவில் பங்கேற்ற வாக்காளர்கள், கியூபெக் மாகாணத்தில் அதிகரித்து வரும் வீடமைப்புச் செலவுகள், உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்தே, அதிகம் கவலை வெளியிட்டனர்.
அதேநேரம், வாக்குச்சாவடிகளில் ஆங்கில மொழி பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் கியூபெக்கின் மொழிப் பாதுகாப்புச் சட்டங்கள் தொடர்பிலும் ஆங்கிலேய மற்றும் சிறுபான்மை வாக்காளர்கள் மத்தியில் தீவிர விவாதங்கள் மேலெழுந்துள்ளன.
தேர்தல் ஆணைக்குழுவான ‘இலக்ஷன்ஸ் கியூபெக்’ (Élections Québec) வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்கூட்டிய வாக்குப்பதிவு நாளில் வாக்களிப்பது எளிதானது என்ற பரவலான கருத்து நிலவினாலும், முதன்மைத் தேர்தல் நாளைக் காட்டிலும் முன்கூட்டிய வாக்குப்பதிவின் போது அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு மையங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுவர்களிடையே ஜனநாயக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 3 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ‘சிறிய வாக்குச்சாவடி’ (Small polling stations) அமைக்கப்பட்டிருந்தமை இம்முறையின் சிறப்பம்சமாகக் கருதப்படுகின்றது.
முன்கூட்டிய வாக்குப்பதிவில் வாக்களிக்கத் தவறிய வாக்காளர்கள், எதிர்வரும் பிரதான தேர்தல் நாளில் தமது வாக்குகளைப் பதிவு செய்ய முடியும் எனத் தேர்தல் ஆணையம் நினைவுபடுத்தியுள்ளது.
