கியூபெக் மாகாணத்தில் கடந்த ஐந்து மாதங்களில் ஐந்து மருத்துவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மருத்துவத்துறையில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் கியூபெக்கின் பல்வேறு பிராந்தியங்களில் பணிபுரியும் பொது மருத்துவ நிபுணர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் உட்பட ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.
மருத்துவத் துறையில் நிலவும் பணிச்சுமை, வளப் பற்றாக்குறை மற்றும் மன அழுத்தம் ஆகியவை எல்லை கடந்து சென்றுள்ளதையே, இந்நிகழ்வுகள் சுட்டிக்காட்டுவதாக மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதன் பின்னணியில் உள்ள தொழில்முறை, நிர்வாக மற்றும் கட்டமைப்பு சார்ந்த வேலைப்பளு காரணியைக் கண்டறிய முழுமையான பகிரங்க விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி 1,500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு, கியூபெக்கின் தலைமை கொரோனர் ரெனொ பெர்னியரிடம் (Reno Bernier) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதாரக் கட்டமைப்பின் வீழ்ச்சிக்கு மருத்துவர்கள் மீது பழியைப் போடும் அரசின் போக்கும் (Doctor-Bashing) மற்றும் எல்லைமீறிய பணி அழுத்தமுமே மருத்துவப் பணியாளர்களின் மனநலப் பாதிப்பிற்கு முக்கிய காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.
கனடிய மருத்துவச் சங்கம் (CMA) 2025 ஆம் ஆண்டு நடத்திய தேசிய அளவிலான ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட மருத்துவர்களில் 46 சதவீதமானோர் கடுமையான மன அழுத்தத்தினால் (Burnout) பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், 34 சதவீதமான மருத்துவர்கள் தங்கள் வாழ்நாளின் ஏதேனும் ஒரு கட்டத்தில் தற்கொலை எண்ணங்களை எதிர்கொண்டுள்ளதாகவும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் இந்தக் கோரிக்கை மனு குறித்துப் பதிலளித்துள்ள கொரோனர் அலுவலகம், சம்பந்தப்பட்ட மரணங்கள் தொடர்பான
விசாரணைகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும், பகிரங்க விசாரணை நடத்துவது குறித்த கோரிக்கை தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.


