மன்னார் முழங்காவில் கடற்கரைப் பகுதியில் வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 370 கிலோகிராமுக்கும் அதிகமான மீன்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படை கப்பல் புவனேக நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலையடுத்து, முழங்காவில் கடற்கரைப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கெப் வாகனம் ஒன்றை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர்.
அந்த வாகனத்தில் வெடி பொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 370 கிலோகிராமுக்கும் அதிகமான மீன்கள் ஏற்றிச் செல்லத் தயாராக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, மன்னார் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 48 வயதுடைய இரு சந்தேக நபர்களும் கெப் வாகனமும் மீன் தொகையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், வாகனம் மற்றும் மீன் தொகை ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


