இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து தன்னை நீக்கியமைக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தாக்கல் செய்த வழக்கு, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கை எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.சுமந்திரன், முன்னாள் பொதுச் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அப்போது கட்சியின் செயலாளராக இருந்த வைத்தியர் சத்தியலிங்கம் அறிவித்திருந்தார்.
எனினும், கட்சி நீக்கம் தொடர்பான கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என அரியநேந்திரன் தெரிவித்திருந்தார்.
பின்னர், 2026 ஜனவரி 9ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றை தற்போதைய பதில் செயலாளர் எம்.சுமந்திரன் அரியநேந்திரனுக்கு அனுப்பியிருந்தார். 2024ஆம் ஆண்டு மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தன்னை கட்சியின் உப விதிகளுக்கு முரணாகவும் சட்டவிரோதமாகவும் நீக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அரியநேந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையிலான சட்டத்தரணிகள் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


