மொண்ட்ரியல் பெருநகரப் பிராந்தியத்தில் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 21,000 வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளதாக, கனடிய புள்ளிவிவர திணைக்களம் (Statistics Canada) தெரிவித்துள்ளது.
கோடைகாலத்தின் இறுதியில் நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்ட சரிவின் ஒரு பகுதியாகவே இந்த வேலை இழப்பு பதிவாகியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட கனடிய புள்ளிவிவர திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, கியூபெக் மாகாணம் முழுவதிலும் ஒகஸ்ட் மாதத்தில் 19,000 வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன.
இதில் பெரும்பாலான வேலை இழப்புகள் மொண்ட்ரியல் பிராந்தியத்திலேயே இடம்பெற்றுள்ளன.
கியூபெக் மாகாணத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்த போதிலும், மாகாணத்தின் வேலையின்மை விகிதம் (Unemployment rate) 5.6 சதவீதமாகவும், மொண்ட்ரியல் பெருநகரப் பிராந்தியத்தில் 6.3 சதவீதமாகவும் மாற்றமின்றி தொடர்கின்றது.
எனினும், கடந்த 12 மாத காலப்பகுதியில் வேலைவாய்ப்பில் வீழ்ச்சியைப் பதிவுசெய்த ஒரே கனடிய மாகாணமாகக் கியூபெக் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாடு முழுவதிலும் ஒகஸ்ட் மாதத்தில் 42,000 வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன.
15,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்த நிலையில், இந்தத் திடீர் வீழ்ச்சி அனைத்து தரப்பிலும் கடுமையான ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதன் மூலம் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் 181,000 வேலைவாய்ப்புகள் உருவாகிய சாதகமான போக்கு, நாட்டின் தொழிற்சந்தையில் முடிவுக்கு வந்துள்ளது.
தேசிய அளவில் அரச துறை (Public sector) வேலைவாய்ப்புகளில் 20,000 பணியிடங்கள் சரிவடைந்துள்ளன.
வணிகம், கட்டட பராமரிப்பு மற்றும் ஆதரவுச் சேவைகள் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் பணி இழப்புகள் பதிவாகியுள்ளன.
அதேவேளை, அமெரிக்காவின் இறக்குமதி வரிகளால் சவால்களை எதிர்கொண்டு வரும் உற்பத்தித் துறை (Manufacturing sector), எதிர்பார்க்கப்படாத வகையில் ஒகஸ்ட் மாதத்தில் 22,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி முன்னேற்றம் கண்டுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச பொருளாதார மந்தநிலை ஆகியவை கனடாவின் வேலைவாய்ப்புச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நாடளாவிய ரீதியில் தொழிலாளர்களின் சராசரி மணிநேர ஊதிய உயர்வு விகிதமும் ஒகஸ்ட் மாதத்தில் 2 சதவீதமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.



