டொரண்டோ முதல் கியூபெக் நகரம் வரை திட்டமிடப்பட்டுள்ள “ஆல்டோ” (Alto) அதிவேக ரயில் திட்டமானது, விவசாய நிலங்களை இரண்டாகப் பிளந்து விவசாய சமூகத்தினருக்குப் பெரும் பேரழிவை (Catastrophic impact) ஏற்படுத்தும் என கியூபெக் விவசாய கூட்டமைப்பு (UPA) எச்சரித்துள்ளது.
ஒட்டாவா மற்றும் மொன்றியல் நகரங்களுக்கு இடைப்பட்ட ரயில் பாதையில் மட்டும் சுமார் 500 விவசாய நிலங்கள் உட்பட 1,700 சொத்துக்கள் இதனால் நேரடியாகப் பாதிக்கப்படும் எனத் திட்ட நிர்வாகம் கணித்துள்ளது.
இந்த நிலையில், விவசாயிகள் மற்றும் அவர்களின் அமைப்புகள் மத்திய அரசுக்குத் தமது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன.
கியூபெக்கின் மிகப்பெரிய விவசாயக் கூட்டமைப்பான ‘ஃபெடரேஷன் டி எல்’யுபிஏ டி லா மொன்டெரிகி’ (Fédération de l’UPA de la Montérégie) அமைப்பின் தலைவர் ஜெரமி லெட்டெலியர் (Jérémie Letellier) இது குறித்துத் கருத்து தெரிவிக்கையில், இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால் விவசாயிகள் தங்களின் நிலங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக 15 முதல் 20 கிலோமீற்றர் வரை சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் கவலைகள் குறித்துப் பதிலளித்துள்ள ஆல்டோ அமைப்பின் தொடர்பாடல் அதிகாரி வெரோனிக் டெஸ் ரோசியர்ஸ் (Véronique Des Rosiers), விவசாய சமூகத்தின் மீதான பாதிப்புகளை முடிந்தவரை குறைப்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

