மே தினப் பேரணியின் போது தனது உருவ பொம்மையைச் சம்மட்டியால் அடித்து, கில்லட்டின் இயந்திரம் மூலம் தலை துண்டிப்பது போல் காட்டிய போராட்டக்காரர்கள் மீது, கியூபெக் தொழிலாளர் துறை அமைச்சர் ஜீன் போலட் (Jean Boulet) உத்தியோகபூர்வமான முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு மொன்றியல் நகரத்தின் பொலிஸாரிடம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினத்தன்று மொன்றியலில் நடைபெற்ற பேரணியில் அரங்கேறிய இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், கியூபெக் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
‘அலையன்ஸ் ஓவ்ரியர்‘ என்ற குழுவினர், ஒரு பெரிய மரத்தாலான கில்லட்டின் இயந்திரத்தைப் பேரணிக்குக் கொண்டு வந்தனர்.
பின்னர், கியூபெக் தொழிலாளர் துறை அமைச்சரின் முகம் ஒட்டப்பட்டிருந்த பொம்மையை அந்த இயந்திரத்தில் வைத்து, பல நூறு பேரின் முன்னிலையில் அதன் தலையைத் துண்டித்தனர்.
இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஜீன் போலட் “ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமுண்டு, ஆனால் ஒரு அமைச்சரைப் பகிரங்கமாகக் கொலை செய்வது போல் சித்தரிப்பது மிரட்டல் குற்றமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.


