கியூபெக் மாகாண பொதுத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, வாக்காளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படும் அனைத்து தேர்தல் தகவல் ஆவணங்களும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே அச்சிடப்பட்டு அனுப்பப்படும் என ‘எலெக்ஷன்ஸ் கியூபெக்’ (Élections Québec) தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கியூபெக் மாகாணத்தில் நடைமுறையிலுள்ள மொழிச் சட்டத் திருத்தங்களுக்கு மதிப்பளித்து, கியூபெக் மொழிச் சாசனத்திற்கு அமைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வாக்காளர் வழிகாட்டி (provincial election guide), வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டதற்கான அறிவிப்பு (notice of entry) மற்றும் தேர்தல் நினைவூட்டல் அட்டை (reminder card) ஆகிய அனைத்தும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே அனுப்பப்படும்.
பிரெஞ்சு மொழியில் மட்டுமே ஆவணங்கள் அனுப்பப்பட்டாலும், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளைப் பேசும் வாக்காளர்கள் (Anglophones and Allophones) தேர்தல் தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளும் வகையில், இந்த அச்சிடப்பட்ட ஆவணங்களில் சிறப்பு ‘கியூ.ஆர்’ (QR code) குறியீடு சேர்க்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ‘கியூ.ஆர்’ (QR) குறியீட்டைச் ஸ்கேன் செய்வதன் மூலம், ‘எலெக்ஷன்ஸ் கியூபெக்’ ஆணையத்தின் இணையத்தளத்திற்குச் சென்று ஆங்கில மொழியில் தகவல்களைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



