எதிர்வரும் கியூபெக் மாகாணப் பொதுத்தேர்தலில், மத்திய ஆட்சிக்கு உட்பட்டு கியூபெக் மாகாணத்தின் தனித்துவத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரே அரசியல் சக்தி லிபரல் கட்சி மட்டுமே என, கியூபெக் லிபரல் கட்சியின் (PLQ) தலைவர் சார்லஸ் மிலியார்ட் (Charles Milliard) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மாகாணத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், மொன்றியலில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
கியூபெக் மாகாணத்தில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்கும் ‘பார்ட்டி கியூபெக்வா’ (PQ) கட்சி, கியூபெக்கை கனடாவில் இருந்து பிரித்துத் தனிநாடாக அறிவிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டிய மிலியார்ட், மறுபுறம் ஆளும்கட்சியான ‘கோலிஷான் அவெனீர் கியூபெக்’ (CAQ) கட்சி மாகாணத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதில் முற்றிலும் தோற்றுவிட்டதாகச் சாடினார்.
“கனடிய கூட்டாட்சி அமைப்பிற்குள் இருந்துகொண்டே கியூபெக்கின் மொழி, கலாசாரம் மற்றும் பொருளாதார நலன்களைப் பலமாகப் பாதுகாக்க முடியும் என்ற உறுதியான கூட்டாட்சி தேசியவாத (Federalist Nationalism) கொள்கையைக் கொண்டுள்ள ஒரே கட்சி லிபரல் மட்டுமே” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பார்ட்டி கியூபெக்வா (PQ) ஆட்சிக்கு வந்தால் பிரிவினைவாதக் கருத்துக்களைத் தூண்டி பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தும் என எச்சரித்த மிலியார்ட், கியூபெக் மக்கள் மீண்டும் ஒரு வாக்கெடுப்பு (Referendum) அல்லது அரசியல் நிலையற்ற தன்மையை விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்



