கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த மேலும் இரு சீன பிரஜைகள் சீகிரியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 23ஆம் திகதி துறைமுக நகரில் இரு சீனக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீன பிரஜை ஒருவர் பலவந்தமாகக் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், கடத்தப்பட்ட நபரின் சடலம் எஹலியகொடை வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகியிருந்த ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதற்கமைய, சீகிரியா பகுதியில் பதுங்கியிருந்த இரு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

