அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததைத் தொடர்ந்து, கனடிய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத புதிய தீர்வை வரிகள் (Tariffs) காரணமாக, கியூபெக் (Quebec) மாகாணப் பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் என மாகாணப் பிரதமர் கிறிஸ்டின் ஃபிரஷெட் (Christine Fréchette) எச்சரித்துள்ளார்.
வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் இறுதி நாளில் பிரெஞ்சு மொழிப் பாதுகாப்பு தொடர்பான கியூபெக்கின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் கலாசாரக் கொள்கைகளில் அமெரிக்கா தலையிட முயன்றதாகவும், கனடாவின் இறையாண்மையை மீறும் வகையிலான இக்கோரிக்கைகளை ஏற்க முடியாது எனக் கூறிப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியமை சரியான முடிவு என்றும் ஃபிரஷெட் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கியூபெக் நிதி அமைச்சர் எரிக் ஜிரார்ட் (Éric Girard) இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், புதிய வரிகளால் மாகாணத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் இழக்கப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்படும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு கியூபெக் மாகாணப் பொருளாதார அமைச்சர் பெர்னார்ட் டிரைன்வில் (Bernard Drainville) இரு சிறப்பு நிதி உதவித் திட்டங்களை அறிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயைக் கொண்டு, அமெரிக்க வரிகளால் வருமானம் பாதிக்கப்பட்ட உற்பத்தி மற்றும் முதன்மைத் துறை நிறுவனங்களுக்கு 24 மாத காலச் சலுகைக் காலத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்படும் என, கியூபெக் மாகாணப் பொருளாதார அமைச்சர் பெர்னார்ட் டிரைன்வில் (Bernard Drainville) தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 1 மில்லியன் முதல் 2 மில்லியன் டொலர் வரை வருவாய் ஈட்டும் சிறிய நிறுவனங்களுக்கு $150,000 டொலர் வரையில் கடனுதவி 12 மாத காலச் சலுகையுடன் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

