செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இறுதிநாளான இன்றைய தினம் புதன்கிழமை 01 என்புக்கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில், 10 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 56ஆவதுநாளான இன்றைய தினம் புதன்கிழமை இறுதிநாள் அகழ்வு பணிகள் நடைபெற்றன.
செம்மணியில் முதலாம் கட்ட அகழ்வு பணிக்காக 09 நாட்களும் , இரண்டாம் கட்ட அகழ்வு பணிக்காக 54 நாட்களும் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக 56 நாட்களும் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டு , அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் இதுவரை செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளின் போது, 583 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவை அனைத்தும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய அகழ்வு பணியில் அட்சரக்கூடு , செப்புக்காசு , மோதிரம், தாயத்து என்பன அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சான்று பொருட்களின் ஆய்வுகளை மேற்கொண்டு, தொல்லியல் ஆய்வாளரின் அறிக்கையும், குழி ஒன்றில் மீட்கப்பட்ட 09 என்புக்கூடுகளின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாக கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், புதைகுழி தவிர்ந்த ஏனைய 14 இடங்களில் அகழப்பட்ட சோதனைக்குழிகளில் , 05 சோதனைக்குழிகளுக்குள் , 08 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அவை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதனால் மேலும் குறித்த பகுதிகளில் என்புக்கூடுகள் காணப்படலாம் எனும் சந்தேகம் நிலவுவதனால் , நான்காம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் , சட்ட வைத்திய அதிகாரியினால் , 14 நாட்களுக்கான பாதீடு மன்றில் சம்பிக்கப்பட்டு , அனுமதி கோரப்படவுள்ளது.
அதற்கான அனுமதியினை மன்று வழங்கும் பட்சத்தில் , பாதீட்டினை நீதி அமைச்சுக்கு அனுப்பி , அதனூடாக நிதி வழங்கபட்டால் , நான்காம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை , ஏற்கனேவே அகழ்ந்து எடுக்கப்பட்ட என்புகூடுகள் மீதான ஆய்வினை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலைமையில், அது தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

