அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட கனடியப் பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீதப் புதிய கூடுதல் வரியை மூன்று நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வரிகள் நடைமுறைக்கு வர இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான காலமே இருந்த பின்னணியில், இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர் மார்க் கார்னி, ஆவணங்கள் இறுதி செய்யப்படும் வரை இந்த வரி விதிப்பை ஒத்திவைக்க அமெரிக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேர்ச்சுவார்த்தையில், அமெரிக்காவின் தற்போதைய முன்மொழிவுகள் போதுமானதாக இல்லை என கனடியத் தரப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கனேடிய உற்பத்திகள் மீதான புதிய 50 சதவீத வரியை முற்றிலும் ரத்து செய்வதோடு மட்டுமல்லாமல், இரும்பு (Steel), அலுமினியம் மற்றும் வாகனத் துறைகள் மீது அமெரிக்கா ஏற்கனவே விதித்துள்ள பிற வரிகளையும் குறைக்க வேண்டும் என கனடா வலியுறுத்துகிறது.
டொனால்ட் ட்ரம்ப்பினால் விதிக்கப்பட்ட இந்தப் புதிய வரிகள் அமலுக்கு வந்தால் இருநாட்டு வணிகங்களும் நுகர்வோரும் மிகக் கடுமையான இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க வர்த்தக சபை (U.S. Chamber of Commerce) எச்சரித்துள்ளது.
“கூடுதல் வரிகள் இருநாட்டுப் பொருளாதாரத்தையும் பாதிப்பதுடன், அமெரிக்கக் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவை அதிகரிக்கும், மேலும் வர்த்தகத்தைச் சார்ந்துள்ள சுமார் 1.3 கோடி அமெரிக்க வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என அமெரிக்க வர்த்தக சபையின் மூத்த துணைத் தலைவர் நீல் ஹெரிங்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

