மொன்றியல் மாநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சைனாடவுன் (Chinatown) பகுதியில், வீடற்றவர்களின் நடமாட்டம், பொது இடங்களில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தொடர்ச்சியான இடையூறுகள் காரணமாக, உள்ளூர் குடியிருப்பாளர்களும் வர்த்தகர்களும் கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு நகர நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்தும், நிலைமை மாறவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சைனாடவுனின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், குறிப்பாக இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்களின் அலறல் சத்தங்கள் மற்றும் முறையற்ற நடத்தைகளால் அமைதியாக உறங்கக்கூட முடியவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இப்பகுதியில் நிலவும் பாதுகாப்பு அற்ற சூழல் காரணமாக, நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த சைனாடவுன் குழந்தை பராமரிப்பு நிலையம் (Daycare) அண்மையில் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
முதியோர் இல்லங்களுக்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்கள் தங்குவதைத் தடுக்க, நிர்வாகத்தினர் வேலிகளை அமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், சைனாடவுன் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளைத் தொடர்ந்து, மொன்றியல் நகர நிர்வாகம் சில புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இப்பகுதியின் அடையாளத்தைப் பாதுகாக்கவும், அங்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் ‘சைனாடவுன் கூட்டணி’ (Chinatown Alliance) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

