கியூபெக் மாகாணத்தில் சைக்கிளோஸ்போரியாசிஸ்(Cyclosporiasis) என்ற குடல் ஒட்டுண்ணித் தொற்று வரலாறு காணாத வகையில் மிக வேகமாகப்
பரவி வருகின்றது.
தற்போதைய கோடைகாலத்தில், இம்மாதம் முதலாம் திகதி வரையிலான தரவுகளின்படி, கியூபெக் மாகாணத்தில் மொத்தம் 223 பேருக்கு இத்தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கியூபெக் சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 79 நோயாளர் பதிவுகளுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்குக்கும் அதிகமான உயர்வாகும். மேலும், கடந்த 2022 முதல் 2025 வரையிலான நான்கு ஆண்டுகளில் பதிவான வருடாந்த சராசரி நோயாளர் பதிவுகளின் எண்ணிக்கையான 70-ஐ விட, இது மிக அதிகம் ஆகும்.
சைக்கிளோஸ்போரா (Cyclospora) எனப்படும் நுண் ஒட்டுண்ணியால் மனித குடலில் ஏற்படும் இத்தொற்று, கடுமையான வயிற்றுப்போக்கை உண்டாக்கக்கூடியது.
மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாகப் பரவாவிட்டாலும், இந்த ஒட்டுண்ணியால் மாசுபடுத்தப்பட்ட நீர், பழங்கள், காய்கறிகள் மற்றும் பச்சிலை மூலிகைகளை உண்பதன் மூலமே மனித உடலுக்குள் பரவுகிறது. தற்போது கியூபெக்கில் பதிவாகியுள்ள நோயாளர் பதிவுகளில் பெரும்பாலானவை, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கான சர்வதேசப் பயணங்களைப் பின்னணியாகக் கொண்டவை என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதேவேளையில், கியூபெக் மாகானத்திற்கு வெளியே இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலமாகவும் உள்ளூர் மக்களிடையே இத்தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

