திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி கொடூரமான அமோனியா வாயுக்கசிவு விபத்து நிகழ்ந்தது. இந்த துயரச் சம்பவத்தில் சிக்கி 18 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர்களான ஜோசப் ஜெகன், மோகன் மற்றும் ஆலை மேலாளர் டேனியல் டைட்டஸ் சிங் ஆகிய 3 பேர் தங்களுக்கு ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். முன்னதாக இவர்களின் ஜாமின் மனுக்களை திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உயிரிழந்த 18 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் தலா ₹10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 3 பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஜாமினில் வெளிவரும் மூவரும் விசாரணை அதிகாரி முன்னிலையில் தொடர்ந்து ஆஜராகி வழக்கமான கையெழுத்திட வேண்டும் என்றும், காவல்துறையின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

