கியூபெக் (Quebec) மாகாணத்தில் உள்ள வயதுவந்தோருக்கான விற்பனையகங்கள் (Erotic Boutiques) வாரத்தின் அனைத்து நாட்களிலும் இரவு 11:00 மணி வரை திறந்திருப்பதற்கு, அனுமதி அளிக்கும் புதிய சட்டத் திருத்தத்தை மாகாண அரசு கொண்டுவந்துள்ளது.
இந்த மாத நடுப்பகுதியில் இருந்து இந்த புதிய நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வரவுள்ளது.
கியூபெக் மாகாண அரசின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் (Quebec Official Gazette) வெளியிடப்பட்ட வரைவு ஒழுங்கு முறையின்படி, வயதுவந்தோருக்கான விற்பனையகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் இயங்கு நேரம் மற்றும் அவை செயற்படக்கூடிய நாட்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வயதுவந்தோருக்கான சாதனங்களை முதன்மையாக விற்பனை செய்யும் கடைகள், ஆண்டின் 365 நாட்களும் காலை 8:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இணையவழி வர்த்தக நிறுவனங்களின் கடுமையான போட்டிக்கு மத்தியில், பொருட்களை நேரில் பார்த்து, விளக்கம் கேட்டு வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய அரசின் இந்த நிரந்தர முடிவு பெரும் உறுதுணையாக இருக்கும் என , வயதுவந்தோருக்கான விற்பனையகங்களை நடத்தும் கியூபெக் வணிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


