கனடாவின் குயெல்ஃப் பல்கலைக்கழகத்தின் “Guelph Family Health Study” ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், “Clock Genes” எனப்படும் உயிரியல் நேர கட்டுப்பாட்டு மரபணுக்கள், குழந்தைகளின் உணவு பழக்கங்கள் மற்றும் உடல் எடை அதிகரிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மரபணுக்கள், உடலில் 24 மணி நேர சுழற்சியில் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன.
Nutrients என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், தூக்கத்துடன் தொடர்புடைய சில மரபணு மாற்றங்கள், குழந்தைகள் அதிக கலோரிகளை உட்கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் 2 முதல் 6 வயது வரையிலான 168 குழந்தைகளின் மரபணுக்கள் மற்றும் உணவு பழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
குயெல்ஃப் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டேவிட் மா, குழந்தைகளின் தூக்கம், உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கங்கள் சிறு வயதிலேயே உருவாகின்றன என்றும், உடலின் இயற்கையான நேர சுழற்சியை மதிப்பது ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆய்வாளர்கள் கூறுகையில், குழந்தைகளின் ஆரம்பகால உணவு பழக்கங்கள் எதிர்காலத்தில் நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நோய்களின் அபாயத்தை பாதிக்கக்கூடும்.
எனினும், இது ஆரம்ப கட்ட ஆய்வு மட்டுமே என்றும், மரபணுக்கள் மட்டுமே உடல் பருமனுக்கான ஒரே காரணம் அல்ல என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை சிறு வயதிலிருந்தே உருவாக்குவது முக்கியம் என இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

