அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 35% ஆக உயர்த்தியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கனடா போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், அமெரிக்காவின் முந்தைய நடவடிக்கைகளுக்கு எதிராக கனடா பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறியே, இந்த முடிவை டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.
மார்ச் மாதம் முதல் 25 சதவீதமாக இருந்த இந்த புதிய வரி உயர்வு, உடனடியாக அமலுக்கு வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த நிர்வாக ஆணையானது, கனடாவின் வட எல்லை வழியாக பென்டானில் உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருட்கள் அமெரிக்காவுக்குள் பெருமளவில் நுழைவதைத் தடுப்பதற்கு, கனடா தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறது.
அதே வேளை, ஏற்கனவே அமுலில் இருக்கும் கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்தின் (CUSMA) விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் கனடா உற்பத்திப் பொருட்களுக்கு இந்த புதிய வரி பொருந்தாது எனத் தெரியவருகின்றது.
இதனால், கனடாவின் பெரும்பாலான ஏற்றுமதிகள் தொடர்ந்து வரியில்லாமல் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான சாத்தியம் உள்ளது.
