சவூதி அரேபியாவுக்கு எதிராக உடனடிச் அமலுக்கு வரும் வகையில் கடல்வழித் தடையை (Naval Blockade) விதிப்பதாக யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சி இயக்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பாப் அல்-மந்தேப் (Bab al-Mandeb) கடல் வழியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
ஹூதி இயக்கத்தின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரியா (Yahya Saree) தொலைக்காட்சியில் ஆற்றிய உரை ஒன்றிலேயே, இக்கடற்படை முற்றுகை அறிவிப்பை வெளியிட்டார்.
சவூதி அரேபியாவின் கொடியுடன் செல்லும் கப்பல்கள் மற்றும் சவூதி துறைமுகங்களை நோக்கிச் செல்லும் அனைத்துக் கப்பல்களுக்கும் இத்தடை பொருந்தும் என, அவர் எச்சரித்தார்.
தங்கள் நாட்டின் மீதான சவூதியின் வான் மற்றும் கடல்வழித் தடைகளுக்குப் பதிலடியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சவூதி தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படும் எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஹூதி இயக்கம் எச்சரித்துள்ளது.
அந்தப் பிராந்தியத்தில், கடந்த பல ஆண்டுகளாக நிலவி வந்த அமைதிச் சூழல் முறிந்ததைத் தொடர்ந்து, இரு தரப்பிற்கும் இடையே மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்கனவே நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, சவூதி அரேபியா தனது கச்சா எண்ணெயைச் செங்கடல் துறைமுகமான யான்பு (Yanbu) வழியே ஏற்றுமதி செய்து வந்தது.
தற்போது பாப் அல்-மந்தேப் நீரிணைப் பகுதியிலும் முற்றுகை அறிவிக்கப்பட்டுள்ளதால் சவூதியின் கடல்வழி எண்ணெய் ஏற்றுமதி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய கடல்வழி வர்த்தகத்தில் சுமார் 12 சதவீதமானவை மற்றும் சூயஸ் கால்வாய் வழிச் செல்லும் கொள்கலன் போக்குவரத்தில் 25 சதவீதமானவை, இந்த பாப் அல்-மந்தேப் நீரிணை வழியே நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



