மொண்ட்ரியல் – வடக்குப் பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு மாபெரும் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மொண்ட்ரியல் நகரில் உள்ள கறுப்பின மற்றும் அரபு வம்சாவளி மக்களுக்கு எதிராக, சில பொலிஸ் அதிகாரிகள் திட்டமிட்ட இனவெறி மற்றும் வன்முறைத் தாக்குதல்களை நிகழ்த்தியதாக வெளிவந்த தகவலை அடுத்தே, இந்தப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மொண்ட்ரியல் – வடக்கு பிராந்தியத்தில் உள்ள Station 39 என்ற பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 16 பொலிஸ் அதிகாரிகளே, சிறுபான்மையின மக்களுக்கு எதிராக மிகக் கொடூரமான இனவெறிச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனரெனத் தெரியவருகின்றது.
குறிப்பாக, கைது நடவடிக்கைகளின் போது கறுப்பின இளைஞர்களின் டிரெட்லாக்ஸ் (Dreadlocks/Locs) எனப்படும் அடர்ந்த தலைமுடிப் பகுதிகளை வெட்டியுள்ள அந்த பொலிஸ் அதிகாரிகள், அவற்றை தங்களின் வெற்றிக்குறியீடுகளாக சட்டவிரோதமாகச் சேகரித்து வைத்துள்ளனர்.
இந்த விவகாரம், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மொண்ட்ரியல் பொலிஸ்படையின் தலைமை இயக்குனர் ஃபேடி டாக்ஹெர் (Fady Dagher) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த இனவெறிக் கொடுமையைக் கண்டித்து இன்று, ஹென்றி-பூரஸ்ஸா (Henri-Bourassa) வீதியில் உள்ள பொலிஸ் நிலையத்தின் முன்பாக, நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர்.
பொலிஸ் வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு (COBP) மற்றும் ஹூட்ஸ்டாக் (Hoodstock) போன்ற சமூக அமைப்புகளின் தலைமையில், அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


