மொண்ட்ரியல் (Montreal) நகரில் உள்ள தனியார் முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்றில், தங்கியிருந்த வயோதிபர்களை துன்புறுத்தி, அவர்களுக்கு தவறான மருந்துகளை வழங்கிய, பராமரிப்பு இல்ல உரிமையாளருக்குக் கனேடிய நீதிமன்றம் வீட்டுச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
மொண்ட்ரியலின் பீக்கன்ஸ்ஃபீல்ட் (Beaconsfield) பகுதியில் ரெசிடென்ஸ் ஆல்ப்ஸ் (Residence Alps) என்ற முதியோர் இல்லத்தை நடத்தி வந்த 67 வயதான பிரமீளா கூப்லால் (Pramela Kooblall) என்ற பெண் மீது, தனது பராமரிப்பில் இருந்த மூன்று முதியவர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை வழங்கத் தவறியமை மற்றும் அவர்களின் மருத்துவ ஆவணங்களை போலியாகத் தயாரித்தமை முதலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிறுநீர் மற்றும் மலக் கழிவுகளைக் கட்டுப்படுத்த முடியாத (Incontinent) முதியவர்கள், தங்களின் கழிவுகள் படிந்த டயப்பர்களுடனேயே (Couches souillées) பல நாட்கள் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.
முதியவர்களை எப்போதும் தூக்கக் கலக்கத்திலேயே வைத்திருப்பதற்காக, தூக்கத்தை வரவழைக்கும் குவாட்டியாபைன் (Quetiapine) என்ற சக்திவாய்ந்த மாத்திரையை ஒரு முதியவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த அளவை விட இருமடங்காக பிரமீளா வழங்கியுள்ளார்.
மேலும், அந்த மாத்திரை பரிந்துரைக்கப்படாத மற்றொரு முதியவளுக்கும் வலுக்கட்டாயமாக அதை ஊட்டியுள்ளார். நீதிமன்ற விசாரணையில், இந்தக் குற்றச்சாட்டுகளை பிரமீளா கூப்லால் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு சார்ந்த இறுதி விசாரணை மொண்ட்ரியல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
இந்த இறுதி விசாரணையில், அரசு மற்றும் பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்களின் கூட்டுப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நீதிபதி எரிக் பவுத்ரியர் (Éric Poudrier), குற்றவாளிக்கு வீட்டுச் சிறைத் தண்டனை (Prison à la maison) விதித்துத் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.


