ஈரான் தேசிய காற்பந்து அணியின் வீரர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் அமெரிக்க மற்றும் கனேடிய விசாக்களுக்காக, தங்களது விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள் துருக்கியில் உள்ள அமெரிக்க மற்றும் கனேடிய தூதரகங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஈரான் தேசிய காற்பந்து அணியானது, 2026 ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இந்த உலகக் கிண்ணத் தொடர் ஜூன் மாதம் 11 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே நிலவும் கடுமையான அரசியல் மற்றும் இராணுவப் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் வீரர்கள் வட
அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான விசா நடைமுறைகள் சர்வதேச விளையாட்டு தரப்பினரால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தூதரகங்கள் செயல்படவில்லை.
இதன் காரணமாக, ஈரான் அணியினர் தங்களின் கைரேகை பதிவு (Biometrics) மற்றும் நேர்காணல் விபரங்களை நிறைவு செய்வதற்காக அண்டை நாடான துருக்கிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த 19 ஆம் திகதி முதல் துருக்கியின் அண்டலியா (Antalya) நகரில் தீவிரப் பயிற்சி முகாமில் ஈடுபட்டுள்ள ஈரான் அணியினர், அங்கிருந்து துருக்கியின் தலைநகர் அங்காராவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு நேரில் சென்று, விசா விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
