மொன்றியலில் நூறாண்டுகளுக்கும் மேலாகச் சமூகப் பணியாற்றி வரும் ‘யெல்லோ டோர்’ (Yellow Door) என்ற தொண்டு நிறுவனம், தனது கட்டிடத்திற்கான சொத்து வரியைக் குறைக்கக் கோரித் தொடர்ந்த வழக்கில் தோல்வியடைந்துள்ளது.
இதனால் அந்த நிறுவனம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டொலர்களைக் கூடுதல் வரியாகச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
மொன்றியல் நகரத்தின் மெக்கில் பல்கலைக்கழகப் பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் கட்டிட மதிப்பு 1.9 மில்லியன் டொலர் என, மொன்றியல் மாநகராட்சி மதிப்பிட்டுள்ளது.
ஆனால், தாங்கள் ஒரு லாபநோக்கற்ற அமைப்பு என்பதால், இந்த மதிப்பீட்டைக் குறைத்து வரியைச் சீரமைக்க வேண்டும் என்று யெல்லோ டோர் நிர்வாகம் கியூபெக் நிர்வாகத் தீர்ப்பாயத்தில் (TAQ) முறையிட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, யெல்லோ, டோர் நிறுவனத்தின் வரிக்குறைப்புக் கோரிக்கையை நிராகரித்தார்.
ஒரு கட்டிடம் தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமானதா அல்லது பெரிய வணிக நிறுவனத்திற்குச் சொந்தமானதா என்பதைச் சட்டம் பார்ப்பதில்லை எனவும் aருகில் உள்ள கட்டிடங்கள் என்ன விலைக்கு விற்கப்படுகின்றனவோ, அதன் அடிப்படையிலேயே சொத்து மதிப்பு கணக்கிடப்படும் எனவும் ஒருவருக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பது வரிச் சமநிலையைப் பாதிக்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பால் யெல்லோ டோர் நிறுவனம் ஆண்டுக்குச் சுமார் 17,000 டொலர் வரியாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
