பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா குறித்து, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா(Viksit Bharat) என்ற இலக்கை எட்ட 'பெண் சக்தி (Nari Shakti) சட்டப்பேரவைகளில் முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெறுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் தற்போதுள்ள 543 மக்களவை இடங்களை 850-ஆக உயர்த்த, அந்த நாட்டின் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பொதுப் பிரிவினரின் இடங்களைக் குறைக்காமல் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க முடியும் என இந்திய மத்திய அரசாங்கம் தெரிவிக்கின்றது. இந்த தொகுதி மறுவரையறை காரணமாகத் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த இந்தியப் பிரதமர் மோடி, எந்த மாநிலத்திற்கும் அநீதி
இழைக்கப்படாது எனவும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
மேலும், இந்தச் சட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கினால், அதற்கான முழுப் புகழையும் அவர்களே எடுத்துக் கொள்ளட்டுமென இந்தியப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். புதிய சட்டத்தின்படி, மாநிலங்களுக்கு 815 இடங்களும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 இடங்களும் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
