மொன்றியல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெறுமதிமிக்க சொகுசு வாகனங்களைத் திருடி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த சமூகவிரோதக் கும்பலொன்றின் முயற்சியை மொன்றியல் பொலிஸார் (SPVM) முறியடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேரை மொன்றியல் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இரகசிய விசாரணையைத் தொடர்ந்து, மொன்றியலின் பல்வேறு பகுதிகளிலும், ரிபென்டிக்னி (Repentigny) போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் பொலிஸார் அதிரடிச் சோதனைகளை நடத்தினர்.
இந்தச் சோதனையின் போது, திருடப்பட்ட 10 வாகனங்கள், போலி இலக்கத் தகடுகள் மற்றும் வாகனங்களைத் திருடப் பயன்படுத்தப்படும் நவீன இலத்திரனியல் கருவிகள் முதலானவை கைப்பற்றப்பட்டன. கியூபெக் மாகாணப் பொலிஸார் (SQ) மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகவரகம் (CBSA) ஆகியவற்றுடன் இணைந்தே, இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.
இந்த சமூகவிரோதக் கும்பல் மிகவும் திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வந்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது. ஒரு வாகனத்தைத் திருடியதும், அதில் ஜி.பி.எஸ். (GPS) கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய, அந்த வாகனத்தைச் சில மணிநேரங்கள் ஒரு பொது இடத்தில் நிறுத்தி வைப்பார்கள் எனவும் யாரும் தேடி வராத பட்சத்தில், அந்த வாகனத்தைக் கொள்கலன்களில் (Containers) ஏற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் எவ்வளவு நவீனமாகச் செயல்பட்டாலும், எமது பாதுகாப்புப்படையினர் அவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் எனப் பொலிஸ் கமாண்டர் பியர்-மார்க் ஹூல் தெரிவித்துள்ளார். மொன்றியலில் அதிகரித்து வரும் வாகனத் திருட்டுகளைக் கட்டுப்படுத்த இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
