கியூபெக் மாகாணத்தின் சட்டமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் 5-ஆம் திகதி வரை உத்தியோகபூர்வமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய கியூபெக் முதல்வர் பிரான்சுவா லெகோ (François Legault) பதவி விலகவுள்ள நிலையில், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான இடைக்கால நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் ‘கொலிஷன் அவெனிர் கியூபெக்’ கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
முன்னாள் பொருளாதார அமைச்சர் கிறிஸ்டின் பிரெச்செட் (Christine Fréchette) மற்றும் முன்னாள் சுற்றுச் சூழல் அமைச்சர் பெர்னார்ட் டிரெய்ன்வில் (Bernard Drainville) ஆகிய இருவருக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
கட்சியின் புதிய தலைவர் யார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், கியூபெக்கின் புதிய முதல்வர் தனது மாகாண அமைச்சரவையை அமைப்பதற்கும், புதிய கொள்கைகளை வகுப்பதற்கும் போதிய கால அவகாசம் வழங்கும் நோக்கில், தற்போதைய சட்டமன்ற அமர்வு கலைக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாண சட்டமன்றத்தின் புதிய அமர்வு மே 5-ஆம் திகதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
