மொன்றியல் நகருக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணி ஒருவருக்குத் தட்டம்மை (Measles) தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொன்றியல் பொதுச் சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் மொன்றியல் சர்வதேச விமான நிலையம் மற்றும் செயின்ட்-ஜஸ்டின் சிறுவர் வைத்தியசாலை (Sainte-Justine Hospital) உள்ளிட்ட, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட திகதிகளில் இந்த இடங்களுக்குச் சென்ற மொன்றியல் நகரவாசிகள், தங்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அவதானிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தட்டம்மை என்பது காற்றினால் மிக வேகமாகப் பரவக்கூடிய ஒரு வைரஸ் தொற்றாகும்.
கடும் காய்ச்சல், இருமல், சளி, கண்கள் சிவத்தல் மற்றும் உடலில் சிவப்பு நிறத் தடிப்புகள் ஏற்படுதல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு அறிகுறிகள் தென்பட 21 நாட்கள் வரை எடுக்கலாம் என்ற நிலை காணப்படுவதால், மார்ச் 24 அன்று அந்த இடங்களுக்குச் சென்றவர்கள் ஏப்ரல் 14 வரை அவதானமாக இருக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஆண்டின் தற்போதைய காலப்பகுதி வரை, நாடு முழுவதும் 650-க்கும் மேற்பட்ட தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
